அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் மானியத்துடன் கடன் பெறலாம்


அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் மானியத்துடன் கடன் பெறலாம்
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 6 Jun 2023 6:46 PM GMT)

அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் திட்டத்தில் தொழில் தொடங்க 35 சதவீத மானியத்தில் கடன் உதவி பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை

அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் திட்டத்தில் தொழில் தொடங்க 35 சதவீத மானியத்தில் கடன் உதவி பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

கருத்தரங்கம்

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:- தொழில் முனைவோர்களுக்கு பிரதியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர்கள் நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டத்துக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

இதில், உணவுப்பதப்படுத்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், சிமெண்டு செங்கல், கயிறு மற்றும் கயிறு நார் சார்ந்த பொருட்கள், மளிகைக்கடை, வணிக பொருட்களின் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக்கூடம், நகரும் அலகுகள் கொண்ட டிராவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரைஸ் மில், ஆயில் மில், உள்ளிட்ட தொழில் திட்டத்தின் கீழும் பயன்பெறலாம். மேலும், இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் கடனுதவிகள் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

35 சதவீத மானியம்

இதில், மொத்த திட்டத்தொகையில் 35 சதவீதம் மானியமாகும். மானிய உச்சவரம்பு ரூ.1.50 கோடியாகும். இதுமட்டுமன்றி, கடனை திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதவட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தனிநபரும் மற்றும் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளரும், பங்குதாரர் கூட்டாண்மை, ஒரு நபர் நிறுவனம், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு சட்டப்படியாக வரையறுக்கப்பட்டது அல்லாமல், வேறு கல்வித்தகுதி தேவையில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கிக்கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாகவும் இலவசமாக வழங்கப்படும்.

பயன்பெறலாம்

இதில் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட தொழில் மையத்தினை அணுகி, பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) பாஸ்கர், தாட்கோ மாவட்ட மேலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story