இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி கலெக்டர் கார்மேகம் தகவல்
தொழில் முதலீட்டு கழகம் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்,
கடன் வசதி திட்டங்கள்
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கடன் வசதி திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் தொழில்துறையின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், இளைஞர்கள் புதிய தொழில் தொடங்கவும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது.
முதலீட்டு மானியம்
மேலும் தகுதி பெறும் தொழில்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரையும், மற்ற திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1½ கோடி வரையும் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் சேலம் சுவர்ணபுரியில் இயங்கி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக இயக்குனர் மாரியப்பன், சேலம் கிளை மேலாளர் ராமகிருஷ்ணன், அலுவலர்கள் ராஜேந்திரன், காமராஜ், சேலம் உற்பத்தியாளர் குழு தலைவர் இளங்கோவன், இந்திய வர்த்தக சபை தலைவர் கார்த்தி கந்தப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.