மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடனுதவி-அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்


மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடனுதவி-அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிரான்மலை பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

பிரான்மலை பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

ரேஷன் கடை

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.57 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதைதொடர்ந்து தேத்தங்காடு பகுதியில் உள்ள முஸ்லிம் மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டுமான பணிக்கும் அடிக்கல் நாட்டினார். சிங்கம்புணரி வடக்கு வேளாளர் தெருவில் புதிதாக ரேஷன் கடை மற்றும் பிரான்மலையில் உள்ள ரேஷன் கடை ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பெரிய கருப்பன் பேசும்போது கூறியதாவது:-

ரேஷன்கார்டு தாரர்கள் சிரமத்தை போக்குவதற்காக ஆயிரம் குடும்ப அட்டைக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரித்து தனியாக புதிய ரேஷன் கடை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் சிங்கம்புணரி-4 என்ற ரேஷன் கடையில் 1275 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் கடையிலிருந்து சிங்கம்புணரி-8 என்ற ரேஷன் கடை பிரிக்கப்பட்டு அதில் 556 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்மலை கிராமத்தில் மொத்தம் 1103 ரேஷன் கார்டு உள்ள கடையில் இருந்து 545 குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழு

மேலும் சிங்கம்புணரி உள்பட 25 தொடக்க வேளாண்மை கடன் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.11.89 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி, சிங்கம்புணரி, திருவேகம்பத்து, எழுவன்கோட்டை அனுமத்தன்குடி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தலா ரூ.6.76 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. பிரான்மலை கூட்டுறவுத்துறை கடன் சங்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 66 ேபருக்கு மொத்தம் ரூ.15.12 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜீனு, ஆவின் பால்வளத்துறை தலைவர் சேங்கைமாறன், துணைப்பதிவாளர் குழந்தைவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஜமாத் தலைவர் ராஜா முகமது, ஒன்றிய செயலாளர் பூமிநாதன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், நகர அவை தலைவர் சிவக்குமார் ரெங்கநாதன், சிங்கம்புணரி நகர செயலாளர் கதிர்வேல், பிரான்மலை ஊராட்சி தலைவர் ராம ராமசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி அன்புச்செழியன், பொருளாளர் பாஸ்கரன், பிரதிநிதி புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story