வாகனங்கள் வாங்க 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் வகுப்பு, பழங்குடியினத்தினருக்கு கார், பஸ், லாரி வாங்க ரூ.35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
35 சதவீதம் மானியம்
தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத்தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.5 கோடிக்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது.
திட்டத்தொகையில் 25 சதவீதம் மானியம், பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ.75 லட்சமாகும். மேலும் கடனை திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி அல்லது பட்டம், பட்டயம், தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொதுப்பிரிவினரும், இட ஒதுக்கீட்டுப்பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கார், பஸ், லாரி வாங்க கடனுதவி
இந்த திட்டத்தின் கீழ் சேவைப்பிரிவில் மண் அள்ளும் எந்திரங்கள், கான்கிரீட் கலவை வாகனம், ரிக் போரிங் வாகனம், ரேப்ரிஜிரேட்டர் ட்ரக் போன்றவற்றுக்கு மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது பயனாளிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து வகை வணிக வாகனங்களையும் வாங்கி வாடகைக்கு விடுவதற்கான தொழில் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதிபெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினர் கார், டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பஸ், மினிபஸ், சரக்கு போக்குவரத்திற்கான லாரி, ட்ரக் போன்றவற்றை வாங்கி இந்த திட்டத்தின் கீழ் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவியும், கடனை திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 3 சதவீதம் வட்டி மானியமும் பெற்று பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு காட்பாடி காந்திநகரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.