சுயதொழில் தொடங்க 120 பேருக்கு மானியத்துடன் கடன்
கடலூர் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க 120 பேருக்கு மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மானியத்துடன் கடன்
தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவிதிட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அவற்றுள் ஒன்று மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும்.
நிறுவனங்கள் விரிவாக்கம்
இத்திட்டத்தில் உணவுப்பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் முந்திரி
பதப்படுத்துதல், பலாவில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், மரவள்ளி கிழங்கு சிப்ஸ் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள் மற்றும் பழங்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், மீன் மற்றும் இறால்
ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்கள் தயாரித்தல், சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொடிகள் தயாரித்தல், காபிக்கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப்பொரி வகைகள், வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்துதல், தயிர், நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், பல்வகை இறைச்சி வகைகள் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே நடத்தப்பட்டுவரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன்பெறலாம். ரூ.1 கோடி வரையிலான திட்டதொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதிபெற்றவை.
120 பயனாளிகள்
இத்திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படவேண்டும் என கடலூர் மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற https://pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எனவே, கடலூர் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, செம்மண்டலம், கடலூர் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 04142- 290116 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.