மின் கட்டண உயர்வை எதிர்த்து தொழில்துறையினர் வேலை நிறுத்தம்
மின்கட்டண உயர்வை எதிர்த்து தொழில் துறையினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆயிரக்கணக்கான விசைத்தறிக்கூடங்கள் இயங்கவில்லை.
40 சதவீதம் மின்கட்டணம் உயர்வு
இதுகுறித்து தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பல்லடம் கோவிந்தராஜ் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் "எல்.டி 111 பி"என்ற மின் இணைப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது.
தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பல போராட்டங்கள்
இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த 7-ந் ேததி பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில், தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதன் அடுத்தகட்ட போராட்டமாக செப்டம்பர் 11-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம், இ-மெயில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தும் தொழிற்சாலைகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றும் போராட்டமும் நடைபெற்றது.
உரிய தீர்வு
மேலும் கடந்த காலங்களில் கோரிக்கைகளுக்காக ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. தற்போது தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் 170-க்கும் அதிகமான சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குறு,சிறு தொழில் நிறுவனங்களும் மின்கட்டண உயர்வுக்காக கைகோர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளோம். முதல்-அமைச்சர் எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பல்லடம் வட்டார பகுதியில் உள்ள மில்கள், தொழிற்சாலைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள், அதனைத் சார்ந்த தொழில்கள் என அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.