உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் தாலுகா அலுவலகம் முன்பு உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநிலக்குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பழனி சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் பிச்சமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி செல்வராஜ், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில நிர்வாகி சுந்தரவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி பெத்தநாயக்கன்பட்டி பகுதி தூய்மை பணியாளர் அன்னம்மாள் படுகொலையை கண்டித்தும், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, சி.ஐ.டி.யூ. மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பழனி தாலுகா அலுவலக பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.