கழிவுநீர் வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கியகடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட 2 பேர் கைதுகணக்கில் வராத ரூ.2½ லட்சமும் சிக்கியது
கழிவுநீர் வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராமல் இருந்த ரூ.2½ லட்சத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
கடலூர்முதுநகர்,
கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் செய்யலாம் என்று முடிவு செய்து, அதற்கான கழிவுநீர் வாகனத்தை சென்னையை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கினார்.
பின்னர் அந்த வாகனத்தின் பதிவை தனது பெயருக்கு மாற்றம் செய்யவும் மற்றும் தகுதி சான்று பெறுவதற்கும் அவர் முடிவு செய்தார்.
இதற்காக ஆன்லைன் மூலம் 2 ஆயிரத்து 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்திருந்தார். இதற்கான ரசீதை பெற்று, கடலூர் கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்வராஜ் நேரில் சென்று வழங்கினார்.பின்னர், அங்கிருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரை அவர் சந்தித்தார். அப்போது, அவர் தகுதி சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ், இதுபற்றி தனது நண்பரான பத்திரக்கோட்டையை சேர்ந்த வெங்கடாஜலபதியிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து, வெங்கடாஜலபதி நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய 5,500 ரூபாயை வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரிடம் வெங்கடாஜலபதி கொடுக்க சென்றார். ஆனால் அவர் வாங்க மறுத்ததுடன், தனது தனிப்பட்ட உதவியாளரான சிவா என்பவரிடம் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
உதவியாளருடன் கைது
இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த சிவாவிடம் 5,500 பணத்தை வெங்கடாஜலபதி கொடுத்துள்ளார். அதை சிவா பெற்றுக்கொண்டார். பின்னர், அந்த தொகையை வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரிடம் சிவா கொடுக்க சென்றார்.
அதை சுதாகர் பெற்ற போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், அன்பழகன் மற்றும் போலீசார் சுதாகரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனை அடுத்து சுதாகர் மற்றும் அவருக்கு லஞ்சம் பெற உதவிய சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வீடுகளில் சோதனை
அதன் தொடர்ச்சியாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, அங்கு கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.இது தவிர வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகருக்கு சொந்தமாக சென்னை மற்றும் கடலூரில் உள்ள அவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் சங்கம் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாநகராட்சி பகுதியில் இயக்கக்கூடிய அனைத்து வாகனங்களும் முறைப்படி உரிமம் பெற்று இயக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வு கூட்டம் முடிந்ததும் மதியம் 12 மணி அளவில் சுதாகர், கேப்பர் மலையில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காலையில் செப்டிங் டேங் லாரியை உரிமம் பெற்று இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், மதியம் அதே வகையிலான வாகனத்துக்கு உரிமம் மாற்றி வழங்குவதில் லஞ்ச புகாரில் சிக்கி கைதானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.