வியாபாரி குடும்பத்தினரை அறையில் வைத்து பூட்டி ரூ.3¼ லட்சம் நகை-பணம் கொள்ளை
வடலூரில் வியாபாரி குடும்பத்தினரை அறையில் வைத்து பூட்டி விட்டு ரூ.3¼ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடலூர்,
வடலூர் ஆபத்தாரணபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இளநீர் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கினார்.
நேற்று காலை ஆறுமுகம் குடும்பத்தினர் எழுந்து அறை கதவை திறக்க முயன்றனர்.
அப்போது அந்த அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சத்தம்போட்டு உதவிக்கு அருகில் உள்ளவர்களை அழைத்தனர்.
அந்த சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆறுமுகம் குடும்பத்தினர் இருந்த அறையின் கதவை திறந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலு்ம் அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.
ரூ.3¼ லட்சம் நகை-பணம் கொள்ளை
அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முன்வாசல் கதவை மறதியால் பூட்டாமல் ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் கொள்ளையடிக்கும்போது ஆறுமுகம் குடும்பத்தினர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறையை மர்மநபர்கள் வெளிப்புறமாக பூட்டினர். அதனை தொடர்ந்து மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.3¼ லட்சம் நகை-பணத்தை அவர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.