தொழிற்கூடங்களில் நாளை கதவடைப்பு போராட்டம்
தொழிற்கூடங்களில் நாளை கதவடைப்பு போராட்டம்
கோவை
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழிற்கூடங்களில் நாளை கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சிறு குறுந்தொழில் அமைப்பு அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு சிறு குறுந்தொழில் அமைப்பு (டான்சியா) தலைவர் மாரியப்பன் நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குறுந்தொழில் கூடங்கள்
தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் கூடங்கள் உள்ளன. இங்கு 112 கிலோவாட் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு நிலைக்கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 50 கிலோவாட் வரை ரூ.75 ஆகவும், அதற்கு மேல் ரூ.150 ஆகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதியில் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர பீக்அவர்ஸ் என்ற பெயரில் காலை 6 மணி முதல் 10 மணி, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி என்று கணக்கிட்டு, மின்கட்டணம் செலுத்தும் தொகையில் இருந்து 15 சதவீதம் பீக் அவர்ஸ் கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள்.
தொழில் முனைவோர் பாதிப்பு
இதில் சில தொழிற்கூடங்கள் செயல்படாமல் இருந்தாலும் அவர்களுக்கும் பீக்அவர்ஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளால் குறுந்தொழில் கூடங்கள் பல மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்சார கட்டணம் வசூலிப்பதில் இதுபோன்ற பிரச்சினை இருப்பதால் பல தொழில் முனைவோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதுபோன்று சிட்கோ நிறுவனத்தின் சார்பில் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் 24 தொழில் பேட்டையில் உள்ள தொழிற்கூடங்களை 99 வருடத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கலாம் என்று சிட்கோ அறிவித்து உள்ளது. இதனால் தொழில்முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
கதவடைப்பு போராட்டம்
எனவே மின்கட்டணத்தில் பழைய நிலையை அமல்படுத்தக்கோரியும், சிட்கோவில் உள்ள தொழிற்கூடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறுந்தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
கோவையில் இந்த போராட்டத்தில் 25 ஆயிரம் குறுந்தொழில் கூடங்கள் பங்கேற்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது துணைத்தலைவர் சுருளிவேல், கோவை தொழிற்கூட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முககுமார், கொசிமா நல்லதம்பி, கவுமா சவுந்திரகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.