நாமக்கல் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,890 வழக்குகளுக்கு தீர்வு


நாமக்கல் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,890 வழக்குகளுக்கு தீர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,890 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல்:

மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் சுந்தரையா. நந்தினி, பாலகுமார், முருகன், கிருஷ்ணன், மோகனபிரியா, தமயந்தி, ஹரிஹரன் மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முதன்மை குற்றவியல் நீதிபதி வடிவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.

சமரச தீர்வு

குறிப்பாக திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்த சுதாகர் கடந்த 2016-ம் ஆண்டு முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வக்கீல் வடிவேல் வாதாடி வந்தார். இந்த வழக்கில் அரசு போக்குவரத்து கழகம் இறந்து போன டிரைவர் குடும்பத்திற்கு ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க ஒப்பு கொண்டதால் சமரச தீர்வு ஏற்பட்டது.

இதேபோல் மோகனூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெயக்குமார், கடந்த 2011-ம் ஆண்டு தனியார் பள்ளியில் கட்டுமான பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வக்கீல் கணபதி வாதாடி வந்தார். இந்த வழக்கில் ஒப்பந்ததாரர் சரவணன் ரூ.14 லட்சத்து 9 ஆயிரம் கொடுக்க ஒப்பு கொண்டதால் சமரச தீர்வு ஏற்பட்டது. மக்கள் நீதிமன்றத்தை பொறுத்த வரையில் வென்றவர், தோற்றவர் என வேறுபாடு கிடையாது எனவும், இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ரூ.23¼ கோடி பைசல்

திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3,581 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,890 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.23 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்து 796 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story