ஆண்கள், பெண்களுக்கான நெடுந்தூர ஓட்டப் போட்டி


ஆண்கள், பெண்களுக்கான நெடுந்தூர ஓட்டப் போட்டி
x

நாகர்கோவிலில் ஆண்கள், பெண்களுக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஆண்கள், பெண்களுக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நெடுந்தூர ஓட்டப் போட்டி

அண்ணா பிறந்த நாளையொட்டி மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. ஆண்களுக்கு 2 பிரிவாகவும், பெண்களுக்கு 2 பிரிவுகளாகவும் போட்டிகள் நடந்தன. அதாவது 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 8 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 10 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும் என தனித்தனியே நடத்தப்பட்டது. போட்டிகள் அனைத்தும் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இருந்து தொடங்கியது.

நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹாிகிரண் பிரசாத், விளையாட்டு அதிகாரி ராஜேஷ், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள், போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டு ஓடினர்.

பரிசு தொகை

ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் முதல் பரிசை ஜோஸ், 2-வது பரிசை அனிஸ்டோ லியோன், 3-ம் பரிசை மணிகண்டனும், 8 கிலோ மீட்டர் போட்டியில் முதல் பரிசை அகில் ராம், 2-வது பரிசை ஜெயராஜ், 3-வது பரிசை அஜிகுமார் ஆகியோர் பெற்றனர்.

17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசை கல்லூரி மாணவி ரம்யா, 2-வது பரிசை மாணவி ஹரிஷ்மா, 3-வது பரிசை அனிஷா ஆகியோர் பெற்றனர். 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசை போலீஸ் துறையைச் சேர்ந்த ரெஜிதா, 2-வது பரிசை கிருஷ்ண ரேகா, 3-வது பரிசை ஷாலினா ஆகியோர் பெற்றனர்.

போட்டியின் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அந்த வகையில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் கொடுக்கப்பட்டது. மேலும் 4 முதல் 10-வது வரை வந்தவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் ஆறுதல் பரிசும் பெற்றனர்.


Next Story