விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெடுந்தூர ஓட்ட போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
ஓட்டப்போட்டி
பொதுமக்களிடையே உடல் தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வகையில் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி காலை 6.30 மணி முதல் கலெக்டர் அலுவலக வளாகத்தை கடந்து வரைபடத்தில் உள்ள பாதையில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிக்கான தூரம் 17 முதல் 25 வயது உட்பட்டஆண்களுக்கு 8 கிலோ மீட்டரும் பெண்களுக்கு 5 கிலோ மீட்டரும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரமும் இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும் மூன்றாம் பரிசு ரூ.7 ஆயிரமும் 4 முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு ரூ.5ஆயிரமும் வழங்கப்படும்.
விதிமுறை
போட்டிகளில் பங்கேற்க தகுதி உடைய பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது வயது சான்றிதழை தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வருகிற 7-ந் தேதி காலை 6.30 மணியளவில் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தின் முன்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் ஆஜராகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் தங்களது வங்கி கணக்கு புத்தக நகலை இந்தஅலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் பரிசுத்தொகை வங்கி பரிவர்த்தனை மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவே மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 6-ந்தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்து 04562252947 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.