என்னைப்பார்...என் ஆபத்தை பார்!


என்னைப்பார்...என் ஆபத்தை பார்!
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

என்னைப்பார்...என் ஆபத்தை பார்!

கோயம்புத்தூர்

நடந்தது...நடந்து கொண்டே இருக்குது என்பது போல் அந்த பிரதான சாலையில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் நடந்து முடிந்தபாடில்லை.

ஆம்...கோவை- மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டர்மில்ஸ் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேம்பாலத்தைஒட்டிய இதேசாலை சர்வீஸ் சாலையாக மாற்றப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் சிக்கி...திணறி...சிரமத்துடன் வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது. இருபுறங்களிலும் வாகனங்கள் செல்வதால் தூசிப்புயல் அந்த பகுதியை அபிஷேகம் செய்து விடுகிறது. இதனால் சாலையோரத்தில் உள்ள கடைவைத்திருக்கும் வியாபாரிகள், மற்றும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

என் ஆபத்தைப்பார்...

இது ஒருபுறம் இருக்க....சர்வீஸ் சாலையில் பாதாள சாக்கடை மூடி கான்கிரீட்டினால் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் மீது இரும்பு கம்பி போடப்பட்டுள்ளது. அதனை சரியாக கட் செய்யாமல் விட்டதால் தரையின் மேல் பகுதியில் இருந்து என்னைப்பார்...என் ஆபத்தைப்பார் என்று அந்த இரும்பு கம்பி மேல் எழும்பி அனைவரையும் அச்சுறுத்துகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் கால்பட்டு தடுமாறி விழுகின்றனர். பெரிய வாகனங்களின் டயரில் இரும்பு கம்பி பட்டு டயர்களும் சேதம் அடைந்து விபத்துகள் நடைபெறுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

செப்பனிட வேண்டும்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலும் மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு ஊருக்குள் சென்று வருகின்றன. இந்த சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. மேம்பால பணிகள் முடிவடைய தாமதம் ஆவதால் இந்த சாலைகளை செப்பனிட்டு வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story