கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை தேடி தனிப்படை போலீஸ் கேரளா விரைந்தது
கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் பெற்றோரால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி கேரளாவில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் பெற்றோரால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி கேரளாவில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
காதல் திருமணம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராஜா மகன் முருகன் (வயது 24).
இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். முருகன், சுமிகா கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த மாதம் 18-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பெண் கடத்தல்
இதையடுத்து முருகன், சுமிகா ஆகியோர் கூடங்குளத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து வந்தனர். சம்பவத்தன்று இரவு அவர்கள் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.
இதை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து சுமிகாவை தாக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
8 பேர் கைது
இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சுமிகாவின் உறவினரான ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த அமுதா, அனுசுயா, பாப்பா, தங்கம்மாள் உள்பட 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கன்னியாகுமரிக்கு தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் கூடங்குளம் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த செல்வகுமார், விஜயகுமார், வைகுண்ட மணி ஆகியோரை கைது செய்தனர். ஆனால் அங்கு சுமிகா, அவரது பெற்றோர் இல்லாததால் அவர்கள் எங்கே சென்றார்கள்? என்பது குறித்து தெரியவில்லை.
கேரளாவில் தனிப்படை
இந்த நிலையில் சுமிகாவை அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர். அவர்கள் சுமிகாவையும், அவரது பெற்றோரையும் தீவிரமாக தேடி வருகிறாா்கள்.