'மக்களை தேடி, நம்ம மேயர்' நிகழ்ச்சி


மக்களை தேடி, நம்ம மேயர் நிகழ்ச்சி
x

பாளையங்கோட்டையில் ‘மக்களை தேடி, நம்ம மேயர்’ நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் மக்களின் குறைகளை நேரில் கேட்டு, அதை உடனே சரிசெய்யும் விதமாக 'மக்களை தேடி, நம்ம மேயர்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி பாளையங்கோட்டை மண்டலத்தில் 9, 33, 34 ஆகிய 3 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கான 'மக்களை தேடி நம்ம மேயர்' நிகழ்ச்சி பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் சொத்துவரி, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், பிறப்பு-இறப்பு சான்று, புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, கட்டிட அனுமதி உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். அவற்றில் சில மனுக்களை அதிகாரிகள் குழுவினர் உடனடியாக பரிசீலனை செய்து உடனுக்குடன் சான்றிதழ் மற்றும் அனுமதி ஆணைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமலைமூர்த்தி, மாநகர நல அலுவலர் சரோஜா, செயற்பொறியாளர் வாசுதேவன், பாளையங்கோட்டை மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story