லூப் சாலை ஆக்கிரமிப்பு விவகாரத்தை அரசியலாக்க கூடாது - ஐகோர்ட்டு கருத்து


லூப் சாலை ஆக்கிரமிப்பு விவகாரத்தை அரசியலாக்க கூடாது - ஐகோர்ட்டு கருத்து
x

லூப் சாலையில் உள்ள மீன்கடை, ஓட்டல் ஆக்கிரமிப்புகளை அரசியலாக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதி மீனவர்கள் மீன்கடைகள், ஓட்டல்களை அமைத்துள்ளனர். இதனால் வாகனப் போக்குவரத்துக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சு விசாரித்து வருகிறது. அப்போது, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அங்குள்ள ஓட்டல்களுக்கு உரிமம் உள்ளதா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து கூறியிருந்தது. மேலும், மீன் சந்தை கட்டிடப்பணி முடியும்வரை மீனவர்கள் குடியிருப்புக்கும், சாலைக்கும் இடையில் உள்ள இடத்தில் தற்காலிக மீன்கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கை குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாலையின் மேற்குப்பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படும். போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகனப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த வழக்கை வருகிற ஜூன் 19-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

பின்னர் நீதிபதிகள், 'நாங்கள் யாருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. லூப் பொதுச்சாலை என்பது மாநகராட்சி சொத்தல்ல. அது பொதுமக்களின் சொத்து. அதனால் இந்த சாலையை சிலர் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது' என்றும் கருத்து கூறினர்.


Next Story