அசுர வேகத்தில் செல்லும் லாரிகள்


அசுர வேகத்தில் செல்லும் லாரிகள்
x
திருப்பூர்


தளி பகுதியில் அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

வண்டல் மண்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மழைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் மூலமாக காண்டூர் கால்வாயிலும் நீர்வரத்து ஏற்படுகிறது. ஆனால் அணை கட்டப்பட்ட பின்பு ஒருமுறை கூட முழுமையாக தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அணையின் நீர்தேக்க பரப்பளவில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு மண், சிறு பாறைகள், வண்டல் மண் தேங்கியது.

தூர்வார கோரிக்கை

இதன் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவும் குறைந்து வந்தது.அதைத் தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் தூர்வாரும் பணிகள்தொடங்கப்பட்டது. ஆனால் மழை குறுக்கிட்டதால் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் கடுமையான வறட்சி நிலவியது. அதைத் தொடர்ந்து அணையின் நீர்இருப்பு சரிந்து வந்தது. இதை சாதகமாகக் கொண்டு தூர் வாருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அசுர வேகத்தில் லாரிகள்

அதன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மண் அள்ளும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மண்ணை எடுத்துச்செல்லும் டிப்பர் லாரிகள் சாலையில் அசுர வேகத்தில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி, வளைவுகள், பள்ளி மற்றும் குடியிருப்பு உள்ள பகுதிகளில் கூட வேகத்தை குறைக்காமல் சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி அதிகப்படியான மண்ணை எடுத்துச் சென்று சாலையில் சிதறடித்தும் வருகிறது. தற்போது மழை பெய்வதால் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறியும் வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா?

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை எடுத்துச்செல்லும் டிப்பர் லாரிகளில் முறையான ஆவணங்கள் உள்ளதா? அவை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகிறதா? முறையாக அனுமதி பெற்று தான் மண் எடுத்துச்செல்லப்படுகிறதா? அந்த மண் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story