தொப்பூர் கணவாயில் இரும்பு பார லாரி கவிந்தது-டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்


தொப்பூர் கணவாயில் இரும்பு பார லாரி கவிந்தது-டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் இரும்பு பார லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி கவிழ்ந்தது

சென்னையில் இருந்து இரும்பு பாரங்களை ஏற்றி கொண்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் சின்ன வடகம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார். லாரி தர்மபுரியை கடந்து நல்லம்பள்ளி அருகே உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ரமேஷ் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

மேலும் லாரியில் இருந்த இரும்பு பாரங்கள் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சந்தைபேட்டையை சேர்ந்த சீனிவாசன் (27) என்பவர் மீது விழுந்தது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் ரமேஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் உதவியுடன் மீட்பு குழுவினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story