தக்கலை அருகே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்


தக்கலை அருகே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x

தக்கலை அருகே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள இறைச்சி கழிவுகள்

கேரளாவின் பல்வேறு பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை அப்புறப்படுத்த மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதனால் அங்குள்ள கடைக்காரர்கள் வாகனங்கள் மூலம் இறைச்சி கழிவுப்பொருட்களை தமிழக எல்லை பகுதிகளுக்குள் கொண்டு வந்து இரவோடு இரவாக ஒதுக்கு புறமான பகுதிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். அதன்படி கழிவுகள் வெளியே தெரியாதவண்ணம் கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.

சுகாதார சீர்கேடு

அவ்வாறு கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால் தமிழக எல்லை பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இப்படி கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை அவ்வப்போது பொதுமக்களும் பிடித்து போலீசில் ஒப்படைக்கின்னர். அப்போது அந்த வாகனங்களுக்கு ஒரு சிறுதொகையை அபராதமாக விதித்து கழிவுகளோடு மீண்டும் கேரளாவிற்கு அனுப்பி விடப்படுகிறது.

தினமும் நடக்கும் சம்பவத்தில் ஏதாவது ஒருநாள் பிடிக்கப்பட்டு அபராதம் கட்டிச் செல்வது அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக தெரிவதில்லை. இதனால், மீண்டும் மீண்டும் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் வாகனத்தில் ஏற்றி வருகின்றனர்.

லாரி பறிமுதல்

இந்த நிலையில் நேற்று மாலை தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் துர்நாற்றம் வீசியவாறு ஒரு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தனர். உடனே போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் ஆடு, மாடு, கோழிகளின் இறைச்சி கழிவுகள் துர்நாற்றத்துடன் இருப்பதை கண்டனர். இதுபற்றி தக்கலை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதைத்ெதாடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துபாண்டி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கழிவுகளுடன் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டிரைவரிடம் நடத்திய விசாரணையில், கொல்லத்தை சேர்ந்த அபிஷித் (வயது25) என்பதும், கொல்லம் மாவட்டத்தில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி தமிழக பகுதிக்குள் கொட்ட வந்தது தெரியவந்தது. மேலும், இதுபற்றி டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story