திருமங்கலம் அருகே லாரி டிரைவர், கிளீனரை தாக்கி செல்போன், பணம் பறித்த 4 பேர் கைது
திருமங்கலம் அருகே வடமாநில லாரி டிரைவர், கிளீனரை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே வடமாநில லாரி டிரைவர், கிளீனரை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்-கிளீனர் மீது தாக்குதல்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாபு (வயது 26). லாரி டிரைவர். லாரி கிளீனர் சூரஜ் (20). இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து லாரியில் இன்வெட்டர் பேட்டரி லோடுகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சிட்கோவிற்கு கடந்த 25-ந்தேதி புறப்பட்டனர். கடந்த 29-ந்தேதி இரவு கப்பலூர் சிட்கோவிற்கு லாரி வந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபாபு சரக்கு கொண்டு வந்த சிட்கோ நிறுவனம் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் லோடுகளை இறக்க முடியவில்லை. இதனால் சிட்கோவில் தங்க முடிவு செய்த சிவபாபு, சூரஜ் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு இரவு உணவு அருந்த கூத்தியார்குண்டுக்கு சென்றனர்.
இருவரும் மீண்டும் லாரி நின்ற இடத்திற்கு திரும்பும் போது மதுரை திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சா்வீஸ் ரோட்டில் இரவு 10 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென இவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
செல்போன்-பணம் பறிப்பு
இதில் டிரைவர் சிவபாபுவுக்கு மண்டை உடைந்தது. இவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு அந்த மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது. இதில் காயமடைந்த டிரைவர் சிவபாபு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கும்பலை தேடிவந்தனர்.
சிட்கோ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கூத்தியார்குண்டைசேர்ந்த 4 பேர் என தெரியவந்தது.
4 பேர் கைது
இதனை தொடர்ந்து அவர்களை நேற்று மாலை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் கூத்தியார்குண்டை சேர்ந்த ராஜலிங்கம் (21), விஜயராஜா (27), ராஜவேலு (22), பிரபாகரன் (27) என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரொக்கபணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.. இதில் விஜயராஜா, ராஜவேலு மற்றும் பிரபாகரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.