கடன் தொல்லையால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
மயிலாடும்பாறை அருகே கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜா (வயது 34). லாரி டிரைவர். யுவராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிலரிடம் கடன் வாங்கி, அந்த பணத்தின் மூலம் புதிய லாரி வாங்கினார். இதற்கிடையே கடந்த ஆண்டு யுவராஜாவின் லாரி விபத்துக்குள்ளானது. அதனை சரி செய்வதற்காக தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தில் யுவராஜா மேலும் கடன் பெற்றார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக லாரி மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் யுவராஜா தவித்து வந்தார். கடனை திருப்பி செலுத்தாததால் தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தினர் அவரது லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல் யுவராஜாவுக்கு கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பி கேட்டனர்.
இந்தநிலையில் கடன் தொல்லையால் விரக்தியடைந்த யுவராஜா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் மூலக்கடை அருகே கணவாய்கரடு மலையடிவாரத்துக்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, யுவராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுவராஜாவுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.