லாரி டிரைவர் மர்ம சாவு
தோகைமலை அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்குடியில் இருந்து ஒரு லாரியில் தைல மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு தோகைமலை வந்தார். பின்னர் தோகைமலை அருகே உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தைலமரகட்டைகளை இறங்கி விட்டு, அதிகாலை 3 மணிக்கு காகித ஆலைக்கு வெளியே வந்தார்.
பின்னர் லாரியை சாலையோரம் ஒரு இடத்தில் நிறுத்திய கணேசன் அவரது போனில் லாரியின் உரிமையாளரிடம் மற்றொரு டிரைவரை உடனடியாக அனுப்பி வைக்கும்படி கூறி விட்டு லாரியின் படுக்கையில் உறக்கி விட்டார்.
மர்மசாவு
இதையடுத்து நேற்று காலை மற்றொரு டிரைவரான ஜெயராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது லாரியின் உள்பகுதியில் கணேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் தோகைமலை போலீசாருக்கும், லாரி உரிமையாளருக்கும், கணேசனின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து கணேசன் மனைவி திலகவதி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து, கணேசன் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்.