கடன் விவகாரத்தில் லாரி டிரைவர் கொலை


கடன் விவகாரத்தில் லாரி டிரைவர் கொலை
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

பலரிடம் கடன் வாங்கிய லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவி, மகள், மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

மானாமதுரை

பலரிடம் கடன் வாங்கிய லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவி, மகள், மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாரி டிரைவர் மாயம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் உதய கண்ணன் (வயது 44). லாரி டிரைவர். இவருக்கு புஷ்பலதா என்ற மனைவியும், தாரணி (22) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி உதயகண்ணன் வேலைக்கு சென்றவர் திடீரென மாயமானதாக கூறி அவரது மனைவி மானாமதுரை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகண்ணனை தேடி வந்தனர்.

நேற்று அதிகாலை மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூர் அருகே சீரம்பட்டி விலக்கு பகுதியில் மர்மமான முறையில் உதயகண்ணன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலை

இது தொடர்பாக உதயகண்ணனின் மனைவி புஷ்பலதா மற்றும் மகள் தாரணி, மகன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியதால் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்.

விசாரணையில், இறந்த உதயகண்ணன் பலரிடம் பணம் கடன் வாங்கி கொண்டும், வேலைக்கு சரிவர செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் இருந்து வந்து உள்ளார்.இதனால் குடும்பத்தினர் உதயகண்ணனை கண்டித்தனர்.

இதை தொடர்ந்து அவரது மகன், தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து மானாமதுரை அருகே சீரம்பட்டி விலக்கு பகுதிக்கு வருமாறு தந்தையை அழைத்து உள்ளார். அங்கு வந்த உதயகண்ணனை அவர்கள் இரும்பு கம்பி, கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் உயிரிழந்த அவரை சாலை விபத்தில் பலியானது போல சித்தரிக்க உடலை சாலையோரத்தில் வீசிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

5 பேர் கைது

இச்சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி தந்தையை கொலை செய்ததாக அவரது மகன், 2 நண்பர்கள் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக உதயகண்ணன் மனைவி புஷ்பலதா, மகள் தாரணி உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story