லாரி டிரைவர் கல்லால் அடித்துக் கொலை; 2 நண்பர்கள் கைது


லாரி டிரைவர் கல்லால் அடித்துக் கொலை; 2 நண்பர்கள் கைது
x

செங்கோட்டை அருகே லாரி டிரைவரை கல்லால் அடித்துக்கொலை செய்த 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே லாரி டிரைவரை கல்லால் அடித்துக்கொலை செய்த 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

லாரி டிரைவர்கள்

தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் மகன் கார்த்திக் ராஜா (வயது 38), பேச்சிமுத்து மகன் ஜெகநாதன் (47). லாரி டிரைவர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து 2 லாரிகளில் மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு கேரள மாநிலம் காயங்குளத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக சென்றபோது, செங்கோட்டை அருகே பெரியபிள்ளைவலசையைச் சேர்ந்த மாற்று டிரைவரும், நண்பருமான செய்யது உமரை (40) தங்களுடன் அழைத்து சென்றனர்.

மது அருந்தியபோது...

பின்னர் கேரள மாநிலம் காயங்குளத்தில் லாரிகளில் இருந்து மாங்காய் லோடை இறக்கி விட்டு, அதற்கான பணத்தை பெற்று கொண்டனர். தொடர்ந்து கார்த்திக் ராஜா, ஜெகநாதன், செய்யது உமர் ஆகிய 3 பேரும் மது அருந்தினர். பின்னர் சிறிதுநேரத்தில் கார்த்திக் ராஜா, ஜெகநாதன் ஆகிய 2 பேரும் மதுபோதையில் தங்களது லாரிகளில் தூங்கினர்.

அப்போது அவர்களிடம் இருந்த மாங்காய் லோடு விற்றதற்கான பணத்தையும், செல்போன்களையும் செய்யது உமர் நைசாக திருடிக் கொண்டு, பஸ் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பணத்தை கேட்டு...

பின்னர் மதுபோதை தெளிந்ததும் கண்விழித்த கார்த்திக் ராஜா, ஜெகநாதன் ஆகிய 2 பேரும் தங்களது பணம், செல்போன் ஆகியவை திருடு போனதையும், நண்பர் செய்யது உமர் மாயமானதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து செய்யது உமரைத் தேடி, அவரது சொந்த ஊரான பெரியபிள்ளைவலசைக்கு கார்த்திக் ராஜா, ஜெகநாதன் ஆகிய 2 பேரும் லாரிகளில் நேற்று முன்தினம் காலையில் வந்தனர். அங்கு செய்யது உமரை சந்தித்த அவர்கள் 2 பேரும் தங்களது பணம், செல்போனை தரும்படி கேட்டனர்.

செங்கற்களால் தாக்கி...

அப்போது செய்யது உமர் விரைவில் பணம், செல்போன் ஆகியவற்றை தருவதாக கூறி இரவு வரையிலும் தாமதப்படுத்தி வந்தார். பின்னர் இரவில் அவர்கள் 3 பேரும் அப்பகுதியில் மது அருந்தினர். அப்போது பணம், செல்போனை தருமாறு செய்யது உமரிடம் அவர்கள் 2 பேரும் மீண்டும் கேட்டனர்.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜா, ஜெகநாதன் ஆகிய 2 பேரும் செங்கற்களால் செய்யது உமரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் தப்பி சென்றனர்.

2 நண்பர்கள் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும், செங்கோட்டை போலீஸ் இன்ஸ்ெபக்டர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செய்யது உமரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கார்த்திக் ராஜா, ஜெகநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இறந்த செய்யது உமரின் சொந்த ஊர் தூத்துக்குடி ஆகும். இவர் தனது மனைவியின் ஊரான பெரியபிள்ளைவலசை கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர் தூத்துக்குடியில் வேலை செய்தபோது கார்த்திக் ராஜா, ஜெகநாதன் ஆகியோருடன் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story