25 ஆயிரம் பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்தது


25 ஆயிரம் பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்தது
x

25 ஆயிரம் பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்தது

திருப்பூர்

ஊத்துக்குளி

கோவை டாஸ்மாக் குடோனுக்கு 25 ஆயிரம் பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி ஊத்துக்குளி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் சிதறிக்கிடந்த பாட்டில்களை மதுப்பிரியர்கள் அள்ளிச் சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி

செங்கல்பட்டில் உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து கோவையில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு 25 ஆயிரத்து 200 பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பெரம்பலூைர சேர்ந்த செல்வக்குமார் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 7 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து சிதறின. அப்ேபாது பாட்டிலில் இருந்த மதுபானம் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

மதுபாட்டில்களை எடுத்துக்ெகாண்டு ஓட்டம்

இது குறித்து தகவல் அறிந்த மதுப்பிரியர்கள் உடனே விரைந்து வந்து சாலையில் கிடந்த பீர் பாட்டில்களை போட்டி போட்டு எடுத்து சென்றனர். பலர் தங்களது துணியில் 4, 5 பாட்டில்களை எடுத்துக்ெகாண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு சில மதுபிரியர்கள் பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு சற்று தொலைவிற்கு சென்று குடித்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பீர் பாட்டிலை எடுத்து செல்வதை தடுத்து நிறுத்தினர். இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து நாசமாகியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story