ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் போலீஸ் கமிஷனரிடம் லாரி உரிமையாளர்கள் மனு
ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் லாரி உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் விற்பனை நிலையம், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டு இருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்து கொண்டு என்ன குற்றம் என்றே கூறாமல் பொதுவான குற்றம் எனக்கூறி காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். மேலும், ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இயங்கி கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. லாரி டிரைவர்கள் தலைகவசம் அணியவில்லை. சீட்பெல்ட் போடவில்லை என முரணான காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களால் வாகன உரிமையாளர் வாகனத்துக்கான காலாண்டுவரி, தகுதிச்சான்றிதழ், பர்மிட்கள் பெறுவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்து, வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், அபராதம் விதிக்கும்போது, ஓட்டுனரின் கையொப்பத்துடன் என்ன குற்றம்?. ஓட்டுனர் பெயர், உரிம எண்ணையும் ரசீதில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.