சேவூர் அருகே வாழைக்கன்றுகள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.3 கோடி நஷ்டம்.
சேவூர் அருகே வாழைக்கன்றுகள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.3 கோடி நஷ்டம்.
சேவூர்
சேவூர் அருகே தனியார் நிறுவனத்தில் வாங்கி பயிரிட்ட சூப்பர் நேந்திரன் என்ற ரக திசு கல்ச்சர் வாழைக்கன்றுகள் 13 மாதங்களாகியும் வாழைத்தார் வளர்ச்சியடையாததால் விவசாயிகள் ஏமாற்றம்.இதனால் ரூ.3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் அவினாசி தாசில்தார் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் தனியார் நிறுவனம் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தனியார் நிறுவனம்
மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது ஜெயின் என்ற தனியார் நிறுவனம்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் அமைத்து அந்த கிளைகள் வழியாக விவசாயத்திற்கு தேவையான சொட்டு நீர் அமைத்துக் கொடுத்தல், விதைகள் விற்பனை செய்தல், திசு கல்ச்சர் வாழைக்கன்றுகள் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாயம் சார்ந்த விற்பனைகள் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தின் உடுமலைப்பேட்டை கிளையில், திருப்பூர் மாவட்டம், அவினாசியைடுத்த சேவூர் அருகே உள்ள தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம், குமாரபாளையம். புஞ்சைதாமரைக்குளம், ஆதராம்பாளையம் ஆகிய கிராம பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள் சுமார் 30 ஆயிரம் சூப்பர் நேந்திரன் என்ற ரக திசு கல்ச்சர் வாழைக்கன்றுகள் வாங்கி வந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பயிரிட்டு இருந்தனர்.
விவசாயிகள் அதிர்ச்சி
இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி சீசன் விற்பனைக்காக நேந்திரன் வாழை பயிரிட்ட நிலையில், 15 -வது மாதம் அறுவடை செய்ய வேண்டிய கட்டத்தில், 13 மாதமாகியும் வாழைத்தார்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களிடம் கேட்ட போது முறையான பதில் வராததால், இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவினாசி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து நேற்று வந்த அவினாசி தாசில்தார் மோகனன் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்களை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களுடன் பேசினார். இதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறியுள்ளார்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது
இந்த வாழை மரங்கள், பயிரிட்டு 15 மாதங்கள் கழித்து அறுவடை செய்யும் பயிராகும். இந்த வாழைமரம் ஒன்றுக்கு, முதலில் வாழை கன்று ரூ.40 வாங்கி வருகிறோம். இந்த கன்றை நடுவதற்கு முன்பு உழவு செய்து, உழவுக்கு பின், கன்று நடுவதற்கு என மொத்தம் 70 ரூபாய் செலவு ஆகிறது. அதன் பின் 15 மாத காலங்களில் உரம், பூச்சிமருந்து செலவுகள் மற்றும் ஒரு வருடமாக எங்களது உழைப்புக்கு கூலி என்று பார்க்கும் போது ஒரு வாழை மரத்திற்கு ரூ.250 வரை செலவு ஆகிறது. இந்நிலையில் வாழைமரம் குழை தள்ளி அறுவடைசெய்யும் போது ரூ.750 வரை கேரளா வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள்.ஆனால் தற்போது வாழைத்தார் வளர்ச்சிஅடையாமல் உள்ளது.13 மாதங்கள் ஆகியும் வாழைத்தாரில் மேலே உள்ள 2 சீப்புகள் மட்டும் பழம் ஆகி
விடுகிறது.மற்றவைகள் பிஞ்சு காயை போலவே உள்ளது. இதை பார்த்த வியாபாரிகள் வாழைத்தாரை வாங்க மறுக்கிறார்கள் அதனால் ஒரு வாழைகன்றுக்கு ரூ.1000 இழப்பீடு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்கள்.