அரசு பஸ்சில் தவற விட்ட நகை, பணம் பயணியிடம் ஒப்படைப்பு


அரசு பஸ்சில் தவற விட்ட நகை, பணம் பயணியிடம் ஒப்படைப்பு
x

ஒசூரில் இருந்து வேலூருக்கு வந்த அரசு பஸ்சில் தவறவிட்ட நகை, பணத்தை பயணியிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

வேலூர்

ஒசூரில் இருந்து வேலூருக்கு வந்த அரசு பஸ்சில் தவறவிட்ட நகை, பணத்தை பயணியிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

பஸ்சில் தவறவிட்ட பைகள்

வேலூரை அடுத்த தார்வழி கல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் தீபா. இவர் கணவர் மற்றும் மகனுடன் ஓசூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேலூர் அரசு பஸ்சில் 3 பைகளுடன் ஏறினார். பஸ் புறப்பட சிறிதுநேரம் இருந்த நிலையில் தீபா, மகனுடன் கழிப்பறைக்கு சென்றார். கணவர் மட்டும் பஸ்சில் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் பஸ் அங்கிருந்து புறப்பட தயாரானது. இதனால் தீபாவின் கணவர் பஸ்சில் இருந்து இறங்கி அவர்களை தேடி சென்றார்.

இதுகுறித்து அவர் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. சிறிதுநேரத்தில் அங்கிருந்து பஸ் புறப்பட்டு வேலூரை நோக்கி சென்றது. அதில், தீபா குடும்பத்தினரின் 3 பைகளும் சென்று விட்டது. அவற்றில் 4 பவுன் நகை, ரூ.2 ஆயிரம், மருந்து மாத்திரைகள் இருந்ததால் தீபா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அங்குள்ள நேரக்காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர்.

நகை, பணம் ஒப்படைப்பு

அவர் உடனடியாக வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அதையடுத்து அந்த பஸ் கண்டக்டர் சதீஷ் மற்றும் டிரைவர் ரமேஷ்குமாருக்கு தவற விட்ட பைகளின் விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதனை பத்திரமாக எடுத்து வேலூருக்கு பஸ் வந்தவுடன் அவற்றை போக்குவரத்துக்கழக துணைமேலாளர் (வணிகம்) பொன்பாண்டியிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே தீபா குடும்பத்தினர் ஓசூரில் இருந்து அடுத்த பஸ்சில் வேலூர் புதிய பஸ்நிலையம் வந்தனர். அவர்கள் பஸ்சில் தவறவிட்ட பைகள் குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதையடுத்து அவர்களிடம் 3 பைகளும் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் வைத்திருந்த நகை, பணம், உடமைகள் அனைத்தும் சரியாக உள்ளது என்று பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு தீபா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


Next Story