விற்பனைக்கு வந்து குவியும் பலாப்பழங்கள்


விற்பனைக்கு வந்து குவியும் பலாப்பழங்கள்
x

வடகாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த உற்பத்தியால் விற்பனைக்கு பலாப்பழங்கள் வந்து குவிந்து வருகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

புதுக்கோட்டை

குவியும் பலாப்பழங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகப்படியான அளவில் பலாப்பழ விளைச்சலால், வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் தினமும் ஏராளமான விவசாயிகள் பலாப்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்து வருகின்றனர்.

இவ்வாறு விவசாயிகள் கொண்டு வந்த பலாப்பழங்கள் எடை மற்றும் ஏலம் முறையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது சிறிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.20 -க்கும் பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.150 மற்றும் ரூ.200-க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது.

விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

மேலும் தமிழகத்திலேயே இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்களே அதிக ருசி மிக்கது என்பதால் உள்ளூர் மட்டுமின்றி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தரம் பிரிக்கப்பட்ட பலாப்பழங்கள் சவூதி, குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு மற்றும் ருசி மிகுந்த பலாப்பழம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மத்தியில் விலை வீழ்ச்சியால் வேதனையுடன் விவசாயிகள் இருந்து வருகின்றனர். குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் ஒரு சில விவசாயிகள் பலா பழங்களை பறிக்காமல் பலா மரத்திலேயே விட்டு விடுகின்றனர்.

பறவைகளுக்கு உணவாகி வரும் பலாப்பழங்கள்

இதனால் பலாப்பழங்கள் அனில் மற்றும் பறவைகளுக்கு உணவாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும். பிற மாநிலங்களில் கூட பலாப்பழங்கள் மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்டு சாஸ் மற்றும் சாக்லெட் உள்ளிட்ட பிற பொருட்கள் உற்பத்தி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இப்பகுதிகளில் அதிகப்படியாக விளையும் விவசாய விளை பொருட்கள் எந்தவித மதிப்பு கூட்டுதல் முறையோ மற்றும் வணிக ரீதியான உதவியோ இன்றி ஆண்டு முழுவதும் வீணாகி வருவதாகவும் விவசாயிகள் குறை கூறி வருகின்றனர். விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் இன்றி விவசாயிகள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story