விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி
வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர்கள்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரது பாட்டி வீடு, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமாரபாளையத்தில் இருக்கிறது. இங்கு அந்த வாலிபர் சென்று வரும்போது, அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த காதல் ஜோடி நேற்று பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
பரபரப்பு
இதை அங்கிருந்த அவர்களது நண்பர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.