காதல் தம்பதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் தம்பதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
x

தர்மபுரியில் காதல் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

தனியார் நிறுவன ஊழியர்

தர்மபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி (வயது 38). இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சூர்யா (24). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் 2 பேரும் தூங்குவதற்கு சென்றனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

தூக்கில் தொங்கிய தம்பதி

இதையடுத்து ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது பற்றி தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன்-மனைவி 2 பேரும் வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் வேதமூர்த்திக்கு கடன் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இல்லாத ஏக்கத்தால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story