போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கந்தம்பாளையம் அருகே நல்லூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அருகே உள்ள வாழ்நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சிவசங்கரி (வயது 21). இவர் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி உத்திரகாந்தி மலையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்துராஜ் (25). இவர் திருச்செங்கோட்டில் பாக்கு தட்டு தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு சிவசங்கரி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு சென்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் செய்து முத்துராஜ் குடும்பத்தாருடன் சிவசங்கரியை அனுப்பிவைத்தனர்.