காதல் தம்பதி தற்கொலை முயற்சி
நாமக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து 2 பேரும் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தனர். இதற்கிடையே ராஜசேகருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களை பெற்றோர், உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மயங்கி கிடந்தனர்
இதனால் மனவேதனை அடைந்த காதல் தம்பதியினர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்து அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று காலையில் அவர்கள் இருவரும் விடுதி அறையில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்ட விடுதி ஊழியர்கள் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பரிசோதனையில் அவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை முயற்சி
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பெற்றோர், உறவினர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.