காதல் திருமணம் செய்தவர்கள் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு-பூஜை ரத்து
முசிறி அருகே காதல் திருமணம் செய்தவர்கள் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதுடன், கோவிலில் நடந்த பூஜை ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முசிறி அருகே காதல் திருமணம் செய்தவர்கள் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதுடன், கோவிலில் நடந்த பூஜை ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி கிராமத்தில் ஒரு சமுதாயத்துக்கு உட்பட்ட வேடிச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேற்றுசமூக பெண்களை காதல் திருமணம் செய்து கொண்ட 5 வாலிபர்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர்கள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் வாலிபர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
வழிபாட்டில் பங்கேற்க மறுப்பு
பின்னர் நடைபெற இருந்த பூஜைகளிலும், வழிபாட்டிலும் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் பங்கேற்க கோவில் நிர்வாகிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 5 வாலிபர்கள் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது காதல் திருமணம் செய்து கொண்டதற்காக யாரையும் ஒதுக்கி வைக்க கூடாது. அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினார். ஆனாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
பூஜை நிறுத்தம்
இந்நிலையில் அந்த கோவிலில் பூஜை, வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காதல் திருமணம் செய்த வாலிபர்கள் நீதிமன்றத்தை நாடபோவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சூரம்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.