காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
ஈரோடு மாவட்டம் பவானி குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துநகை (வயது 33). இவர், குமாரபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் சேலம் சின்னதிருப்பதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். சேலம் பள்ளப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் முத்துநகை வார்டனாக வேலை செய்து வந்தார்.
தூக்கில் தொங்கினார்
சந்தோஷமாக மணவாழ்க்கையை தொடங்கிய அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. மேலும், முத்துநகையின் பெற்றோர் அவரை தொடர்பு கொண்டு வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 30-ந் தேதி விடுதியில் இருந்த முத்துநகை திடீரென மின்விசிறியில் துப்பட்டாவை கட்டி தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த விடுதி ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்காததால் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய முத்துநகையை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
பரிதாப சாவு
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு முத்துநகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் முத்துநகையின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரே மாதத்தில் முத்துநகை இறந்ததால் சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதனும் விசாரணை நடத்தி வருகிறார்.