காதல் 'டார்ச்சர்': பட்டதாரி பெண் தூக்குபோட்டு தற்கொலை - காதலன் கைது...!


காதல் டார்ச்சர்: பட்டதாரி பெண் தூக்குபோட்டு தற்கொலை - காதலன் கைது...!
x
தினத்தந்தி 10 Aug 2022 9:45 AM GMT (Updated: 10 Aug 2022 9:46 AM GMT)

மார்த்தாண்டம் அருகே காதல் டார்ச்சரால் பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழித்துறை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்தியராஜ்(56). எலக்ட்ரிசியனான இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் திவ்யா (20). பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்புக்காக செல்லவிருந்தார்.

இந்த நிலையில் திவ்யா மருதங்கோடு இலுப்பப்பவிளையை சேர்ந்த ரெஞ்சித்(20) என்ற வாலிபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ரெஞ்சித் 12-ம் வகுப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திவ்யா இனயம் என்ற இடத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செர்லின் புரூஸ்(19) என்பவரை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. செர்லின் புரூஸ் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார்.

இதை அறிந்த ரெஞ்சித் திவ்யாவுக்கு காதல் டார்ச்சர் கொடுக்க தொடங்கியுள்ளார். அதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையே திவ்யாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை ரஞ்சித் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா தனது பெற்றோரிடம் அது குறித்து தெரிவித்து வருந்தி உள்ளார்.

இந்த நிலையில் மாணவி திவ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருதங்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அதை அறிந்த செர்லின் புரூஸ் அவரிடம் ரெஞ்சித்தை பார்க்க வீட்டிற்கு சென்றாயா என்றெல்லாம் கேட்டு திட்டியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி திவ்யா மருதங்கோட்டில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் இடம் சென்று திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார் மாணவி திவ்யாவின் காதலன் செர்லின் புரூஸை கைது செய்து, காதல் டார்ச்சர் கொடுத்து வந்த ரெஞ்சித்தை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story