தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது
கிணத்துக்கடவில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
கனமழை
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் கிணத்துக்கடவு வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி மெதுவாக ஊர்ந்து சென்றன.
இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை பகுதியில் இருந்து அண்ணாநகர் செல்லும் சாலையில் மழைநீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கிணத்துக்கடவில் இருந்து அண்ணாநகர், செம்மொழி கதிர் நகர், நெம்பர்.10 முத்தூர், பகவதிபாளையம், கல்லாங்காட்டு புதூர் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
கனமழை காரணமாக கிணத்துக்கடவு மேம்பாலம் மற்றும் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் போலீஸ் நிலையம் வரை சாலை உள்பட தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. அங்கு மழைநீர் வடிந்த பின்னர் மணல் மற்றும் கற்கள் தார்ச்சாலையை மூடி கிடந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
முள்ளுப்பாடி மேம்பாலம் அருகே ரெயில்வே கேட் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கிணத்துக்கடவு பகுதியில் கனமழை பெய்து உள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் சாலையோரம் மண்ணரிப்பு ஏற்பட்டு, அந்த பகுதிகள் குழியாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.