லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி குறைவு


லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி குறைவு
x
தினத்தந்தி 22 Jan 2023 6:45 PM GMT (Updated: 22 Jan 2023 6:45 PM GMT)

கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது.

தேனி

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த 15-ந்தேதி வரை வினாடிக்கு 1,844 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின்நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,844 கனஅடியில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மின்உற்பத்தியும் குறையத்தொடங்கியது. நேற்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 3 ஜெனரேட்டர் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 126 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.50 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 94 கனஅடியாகவும் இருந்தது.


Next Story