குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கம்


குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கம்
x

குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி பெய்த பலத்த மழையால், குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் அதிக கூட்டம் வரும் என்பதால் அன்று முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் குற்றாலத்தில் தற்போது தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story