சந்திர கிரகணம்:மாசாணியம்மன் கோவில் நடை இன்று அடைப்பு
சந்திர கிரகணம்:மாசாணியம்மன் கோவில் நடை இன்று அடைப்பு
ஆனைமலை
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் என்பதால் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன்படி மதியம் 2 மணி முதல் கோவிலில் வழிபாடுகள் நிறுத்தப்படுகிறது. பின்னர் நாளை (புதன்கிழமை) காலை வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் மிகவும் பிரசித்திபெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபட உள்ளூர் பகுதி மட்டுமின்றி கோவை மாவட்டத்தின் பல இடங்கள், திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்வர். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்திர கிரகணம் நடப்பதால் கோவில் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. பின், கிரகணம் முடிந்து இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படும். இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதேபோல் பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவில், மாரியம்மன் கோவில், காிவரதராஜ பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்று சந்திர கிரகணத்தையொட்டி நடை அடைக்கப்படுகிறது. பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.