கொள்ளையடித்த பணத்தில் கார், பங்களா, சுற்றுலா என சொகுசு வாழ்க்கை


கொள்ளையடித்த பணத்தில் கார், பங்களா, சுற்றுலா என சொகுசு வாழ்க்கை
x
தினத்தந்தி 7 Aug 2023 10:00 PM GMT (Updated: 8 Aug 2023 11:09 AM GMT)

கோவையில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கார், பங்களா மற்றும் சுற்றுலா என்று சொகுசாக வாழ்ந்து வந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கார், பங்களா மற்றும் சுற்றுலா என்று சொகுசாக வாழ்ந்து வந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகைப்பறிப்பு சம்பவங்கள்

கோவையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பல் மருதமலை முருகன் கோவிலுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் மருதமலை கோவில் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் கும்பல் கைது

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி (வயது 47), அவரது மனைவி பழனியம்மாள் (40), இவர்களின் உறவினர்கள் வனிதா (37), நதியா (37) என்பதும், இவர்கள் கோவையில் குடும்பத்தோடு தங்கியிருந்து நகைப்பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு ரவி மூளையாக செயல்பட்டுள்ளார்.

இவர்கள் கோவை மட்டுமின்றி சென்னை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பு மற்றும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உல்லாச வாழ்க்கை

கைதான 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

இந்த கொள்ளை கும்பல் மாதத்தில் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே நகை பறிப்பு அல்லது கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவார்கள். மற்ற 10 நாட்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதுவரை அவர்கள் புதுடெல்லி, மும்பை, காஷ்மீர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வந்து உள்ளனர்.

கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ரவிக்கு பெங்களூரில் ரூ.5 கோடி மதிப்பில் சொகுசு பங்களாவும், ஒரு காரும் உள்ளது. கொள்ளையடித்த பணத்தில் தங்கள் பிள்ளைகளை டாக்டர் மற்றும் என்ஜினீயரிங் படிக்க வைத்தும் உள்ளனர்.மேலும் இவர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டே கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story