சுற்றுலா சென்றபோது விபத்து: கன்டெய்னர் லாரி மீது சொகுசு வேன் மோதல் :ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் படுகாயம்


சுற்றுலா சென்றபோது விபத்து: கன்டெய்னர் லாரி மீது சொகுசு வேன் மோதல் :ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:47 PM GMT)

சுற்றுலா சென்றபோது சொகுசு வேன், கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் படுகாயடைந்தனர்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

திருவள்ளூர் மாவட்டம் பூச்சேரியை சேர்ந்தவர் சஞ்சய்(வயது 35). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதா (30). இவர்கள் தனது குடும்பத்தினர் 12 பேருடன் சுற்றுலாவாக ஊட்டிக்கு சொகுசு வேனில் நேற்று காலை புறப்பட்டனர். வேனை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஜீவா (24) என்பவர் ஓட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. மேலும் வேனில் சிக்கியவர்கள், காப்பாற்றுமாறு அபயக் குரல் எழுப்பினர். உடனே அப்பகுதியினரும், சாலையில் வந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்துக்கு பின் மீட்பு

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சஞ்சய், லலிதா, 4 குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே டிரைவர் ஜீவாவின், 2 கால்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் அவரால் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் வேனின் ஒரு பகுதி பெயர்த்து எடுக்கப்பட்டது.

ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் ஜீவா மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story