சாலையில் கிடந்த7 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த தச்சு தொழிலாளி
போடியில் சாலையில் கிடந்த 7 பவுன் நகையை தச்சு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்.
போடி அருகே உள்ள பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 38). நேற்று காலை இவர், போடியில் உள்ள தனியார் வங்கியில் தனது நகைகளை அடகு வைக்க கொண்டு வந்தார். அவர் வங்கிக்கு சென்று பார்த்த போது நகைகள் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இந்நிலையில் போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்த தச்சுதொழிலாளியான ராம் சென்றாயன் (39) என்பவர் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையில் பை ஒன்று கிடந்தது. இதையடுத்து அவர் அந்த பையை எடுத்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில் 7 பவுன் நகைகள் இருந்தது. போலீசார் விசாரணையில் அந்த நகைகள் ராஜேஸ்வரி உடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஸ்வரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அவரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்த ராம் சென்றாயனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.