தார்ச்சாலை முறையாக அமைக்கப்படுகிறதா? ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதியில் தார்ச்சாலை முறையாக அமைக்கப்படுகிறதா? என்று ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதியில் தார்ச்சாலை முறையாக அமைக்கப்படுகிறதா? என்று ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தார்ச்சாலை அமைக்கும் பணி
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்பள்ளி ஊராட்சி கொடியம்பாளையத்தில் தனியார் நிறுவனம் அருகில் இருந்து நாவிதன்கடு வழியாக ஆறுகால் சாவடி வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அதில் முறையாக தார்ச்சாலை அமைக்கவில்லை என்றும், சாலையோரம் பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே முறையாக சாலை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் சாலையை முறையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் அதே முறையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆய்வு
அதனைத் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. விடம் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சாலையை சீரமைத்து தருவதாக கூறினர். இதில் திருப்பூர் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஊத்துக்குளி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு ஒன்றிய செயலாளர் ராசப்பன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிரேம்குமார், துரைசாமி, தீனதயாள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.