புதிய வகை பூச்சி தாக்குதலால் 'மா' உற்பத்தி பாதிப்பு


புதிய வகை பூச்சி தாக்குதலால் மா உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:45 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் புதிய வகை பூச்சி தாக்குதலால் மா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் புதிய வகை பூச்சி தாக்குதலால் மா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மா சாகுபடி

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தலைஞாயிறு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் செந்தூரா, பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு, நீளம் என 10-க்கும் மேற்பட்ட மா வகைகள் 5ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ளது.

ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் டன் மாங்காய்களை மாம்பழத்திற்காக தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் வேதாரண்யம் பகுதியில் மாமரங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்தது.

பூச்சி தாக்குதல்

இந்த நிலையில் சேதமடைந்த மாமரங்களை விவசாயிகள் பராமரித்து வந்த நிலையில் இப்போது துளிர்விட்டு மரங்கள் நன்கு வளர்ந்துள்ளது. தற்போது மா பூத்து பிஞ்சு விட ஆரம்பித்து காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் மாபூக்கள் அவ்வப்போது பெய்த மழை மற்றும் பனி, தேன்பூச்சி தாக்குதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு பூக்கள் கருகியதால் மாங்காய் மிக குறைந்த அளவே காய்த்துள்ளது. மேலும் மா இலையில் புதிதாக கருப்பு பூச்சி தாக்கி இலைகள் கருத்து விட்டது. இந்த பூச்சி தாக்குதல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது.

ஆலோசனை வழங்க வேண்டும்

இந்த பூச்சி அனைத்து மாமரங்களுக்கும் பரவி உள்ளது. இந்த ஆண்டு மா விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் ஏமாற்றம் மற்றுமே விவசாயிகளுக்கு மிஞ்சியுள்ளது.

எனவே வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வேளாண்மை துறை அதிகாரிகள் தாமதம் இன்றி உடனடியாக கிராமப்புறங்களில் உள்ள மாமரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து எந்த வகையான பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story