பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் ரூ.70 கோடியில் மேக்ரோ வடிகால் பணிகள்
பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் ரூ.70 கோடியில் மேக்ரோ வடிகால் பணிகள்: அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.
சென்னை,
சென்னையில் உள்ள பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை மற்றும் மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலைகளில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக, மேக்ரோ வடிகால் அமைத்திடும் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
இந்த பணியானது, பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையை, கடந்து பக்கிங்காம் கால்வாயில் இணைக்கும் வகையில் 2.40 கி.மீ. நீளத்திற்கு மேக்ரோ வடிகால் அமைத்திடும் வகையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளது. இதன்மூலம் மழைநீர் 8 கி.மீ. தூரம் கடக்க வேண்டியிருந்த நிலை மாறி, நேரடியாக பக்கிங்காம் கால்வாயில் சேரும் நிலை ஏற்படும். பெருவெள்ள காலங்களில் வேளச்சேரி, ராம்நகர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் ஏற்படும் மழைநீர் தேங்கும் நிலை குறையும்.
அதேபோல மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் 1.70 கி.மீ நீளத்திற்கு மேக்ரோ வடிகால் பணிகள் ரூ.47 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., தலைமை என்ஜினீயர் சந்திரசேகரன், கண்காணிப்பு என்ஜினீயர் செந்தில் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.