மடத்துக்குளம் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் எப்போது?


மடத்துக்குளம் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் எப்போது?
x
திருப்பூர்


மடத்துக்குளம் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, மேம்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சிவில் வழக்குகள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தாலுகா தலைமையகமான மடத்துக்குளத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2015 -ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அமைப்பதற்கான புதிய கட்டிடம் கட்டும் வரையில், தற்காலிகமாக செயல்படும் வகையில் இடம் தேடும் பணி நடைபெற்றது.ஆனால் சரியான கட்டிடம் கிடைக்காத நிலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த பழைய கட்டிடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

தற்போது மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த நீதிமன்றத்தில் மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் போலீஸ் நிலையங்களில் பதிவாகும் குற்ற வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. மேலும் மடத்துக்குளம் தாலுகாவில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால் ஏராளமான சிவில் வழக்குகளும் பதிவாகி வருகின்றன.

புதிய கட்டிடம்

மடத்துக்குளம் நீதிமன்றத்தில் ஆண்டுக்கு 1000-க்கு மேல் வழக்குகள் விசாரணைக்கு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில் வாரம் ஒரு முறை மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் வழக்குகள் தேங்கும் நிலை உள்ளது.

புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்காக 4 வழிச்சாலையில் வேடப்பட்டி அருகில் 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த புதிய இடத்தில் சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் தனித்தனியாக விரைவில் கட்டப்படும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதன்மூலம் வார வேலை நாட்கள் முழுவதும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால் வழக்குகள் தேக்கமின்றி முடிவுக்கு வரும்.எனவே புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்டும் பணிகளை விரைந்து ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Next Story