தேனியில் வேகமாக பரவும் 'மெட்ராஸ் ஐ'


தேனியில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ‘மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது.

தேனி

கண் நோய் பாதிப்பு

'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பாதிப்பு தேனி மாவட்டத்தில் சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், நீர்வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்களில் வெள்ளைப்படலம் சிவப்பு மற்றும் இளம்சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் மூலமாக வீட்டில் உள்ள மற்றவர்களும் பரவி வருகிறது.

இந்த கண் நோய் பாதிப்புடன் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் பாதிப்பால் பயப்பட வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

டாக்டர் அறிவுரை

இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதி ராஜேஷிடம் கேட்டபோது, "வழக்கமாக கோடை காலங்களில் இந்த கண் நோய் பாதிப்பு பரவும். தற்போது மழைக் காலங்களிலும் பரவி வருகிறது. சென்னையில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தேனி மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். இது ஒருவித வைரஸ் மூலம் பரவும் பாதிப்பு. பாதிக்கப்பட்டவரிடம் இருந்து அவருக்கு அருகாமையில் இருக்கும் மற்றவர்களுக்கும் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கைகளால் தேய்க்கக்கூடாது. அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றை தனியாக வைக்க வேண்டும். அவற்றை மற்றவர்கள் எடுத்து பயன்படுத்தக்கூடாது. வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். பயப்படும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை. 3 அல்லது 4 நாட்களில் சரியாகி விடும். அதற்கு பிறகும் பாதிப்பு இருந்தால் கண் டாக்டரை பார்த்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருந்து, மாத்திரைகள் எதுவும் வாங்கி பயன்படுத்தக்கூடாது" என்றார்.


Next Story