ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டி சிறுவன் பலி - அன்புமணி ராமதாஸ் இரங்கல்


ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டி சிறுவன் பலி - அன்புமணி ராமதாஸ் இரங்கல்
x
தினத்தந்தி 22 Jan 2023 1:40 PM IST (Updated: 22 Jan 2023 1:41 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்த்த 14 வயது சிறுவன் மாடு முட்டி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற 14 வயது சிறுவன் மாடு முட்டி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தடங்கம் பகுதியில் 600 காளைகளும், அதற்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போட்டி நடைபெற்ற போது அந்த இடத்தில் மருத்துவ வசதிகளோ, அவசர ஊர்தி வசதியோ இல்லை. அவை அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருந்தால் சிறுவன் கோகுலை இழந்திருக்க மாட்டோம்; அவரது குடும்பம் கண்ணீரில் மூழ்கியிருந்திருக்காது. கோகுல் இறப்புக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.

சிறுவன் கோகுல் மறைந்த உடன், அவரின் கண்கள் மூலம் இருவர் பார்வை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் கோகுலின் கண்களை தானம் செய்த அவரது தந்தை சீனிவாசன் மற்றும் குடும்பத்தினரின் செயல் பாராட்டத்தக்கது. கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோகுலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story